Monday, February 25, 2008

06. தூக்கிப் போட்ட கிரெடிட் கார்டு கிளப்பிய பூதம் : 50 ஆயிரம் ரூபாய் கட்ட வங்கி ஓலை

மும்பை:

`சே! கிரெடிட் கார்டை கண் டாலே எரிச்சலா வருது...அப்படியிருக்கும் போது, எனக்கு கிரெடிட் கார்டை எப்படி வங்கி அனுப் பியது...?' என்று எரிச்சல் பட்டு கிரெடிட் கார்டை , வெறுப்பில் தூக்கி குப்பைத் தொட்டியில் தப்பித்தவறிக் கூட போடாதீர்கள்!

குப்பைத்தொட்டியில் போட்ட கிரெடிட் கார்டு, கல்லூரி பேராசிரியருக்கு பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த பிரபலக் கல்லூரியின் பேராசிரியர் இமானுவேல். வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், ஏ.டி.எம்.,கார்டு வாங்கிக்கொள்ளவில்லை. வங் கிக்கு சென்றுதான், `பாஸ்' புத்தகத்தை தந்து, பணம் எடுப்பார்; பணம் எடுத்ததும், கணக்கு சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்வார்.

இவருக்கு சில மாதம் முன், மொபைல் போனில் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய பெண்,` உங்களுக்கு கிரெடிட் கார்டு வேணுமா சார்? ஆண்டு சந்தா இலவசம் சார்' என்று குழைய குழைய பேசினார். பேராசிரியரோ கடும் கோபத்துடன் , `கிரெடிட் கார்டில் எனக்கு நம்பிக்கை இல்லை; எனக்கு வேண்டாம்' என்று மறுத்துவிட்டார்.

ஆனால், அடுத்த சில நாளில், அவர் பெயருக்கு ஒரு தபால் வந்தது. கூரியர் ஊழியர் அதை கொடுத்து விட்டு சென்றுவிட்டார். கவரை பிரித்துப் பார்த்தவருக்கு கடுங்கோபம்; `கிரெடிட் கார்டை தூக்கி குப்பைத்தொட்டியில் போட்டு விட்டார்.

அத்தோடு அந்த விஷயத்தை மறந்தும் விட்டார். அடுத்த ஒரு மாதத்தில், வங்கியில் இருந்து ஒரு கடிதம் வந்தது. `உங்களுக்கு அளிக்கப்பட்ட கிரெடிட் கார்டில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப் பட்டுள்ளது; அதை 45 நாட்களுக்குள் திருப்பிக் கட்டவேண்டும்' என்று அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இதைப்பார்த்ததும், பேராசிரியருக்கு வந்ததே... உச்சகட்ட கோபம், நேராக வங்கிக்கு போனார். அதிகாரியை சந்தித்து,`நான் கேட்காமலேயே கிரெடிட் கார்டு தந்தீங்க; எனக்கு வேண்டாம் என்று அதை குப்பைத்தொட்டியில் போட்டு விட்டேனே; அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? நான் அதை பயன்படுத்தியதற்கு ஆதாரம் உண் டா?' என்று சண்டை போட்டார்.

`சார், நீங்க கையெழுத்து போட்டு, கிரெடிட் கார்டை வாங்கியிருக்கிறீர்கள்;அப்படியானால்,அதை நீங்கள் தான் பயன்படுத்தி வருகிறீர்கள் என்று தான் எங்களால் உணர முடியும். யாராவது உங்கள் கார்டை பயன்படுத்தி இருப்பதாக நினைத்தால், முன்னதாக புகார் தந்திருக்கலாம்' என்று அதிகாரி விளக்கம் சொல்ல, பேராசிரியர் தலையில் `ஜிவ்வ்' என்று ஏறிவிட்டது.

குப்பைத்தொட்டியில் போட்ட கிரெடிட் கார்டை யாரோ எடுத்து, சட்டவிரோதமாக பயன்படுத்தி, 50 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து நுகர்வோர் கோர்ட்டுக்கு போவதா, பணத்தை கட்டுவதா என்று குழம்பிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர்.இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில்,`கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது மிகவும் உஷராக இருக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு வேண்டாம் என்று எண்ணினால், அதை கூரியர் ஊழியரிடம் இருந்து வாங்காமல் திருப்பி அனுப்பிவிடலாம். கையெழுத்திட்டு வாங்கிவிட்டு, அதை மறந்துவிட்டால், அதை யாராவது பயன்படுத்த நேரிடும். அது தான் பேராசிரியருக்கு ஏற்பட்ட விபரீதத்துக்கு காரணம்' என்று தெரிவித்தனர்.

Thanks : Dinamalar

No comments: