Monday, February 11, 2008

இன்றைய மனிதனுடைய ஜீவிதம் ஒரு சிறைவாசகமாக இருந்து வருகிறது...

ஒரு அழகான ஆறு உயிர்த்துடிப்புடன் சலசலவென்று பலமாக சிரித்துக் கொண்டு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. புதிய இடங்களைப் பார்க்க வேண்டும். புதிய மனிதர்களைச் சந்திக்க வேண்டும். சிறிய கிராமங்களையும் பார்க்க வேண்டும். மலைப் பிரதேசங்களில் இருக்கும் அழகை ரசிக்க வேண்டும். பசுமையான நெற்பயிர்கள் அங்கு வீசிக் கொண்டிருக்கும் காற்றில் உந்தப்பட்டு ஆடும் நடனத்தைக் கண்டுகளிக்க வேண்டும் என்று அந்த ஆறு பலவிதமான ஆசைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.அந்த ஆறு தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பாய்ந்து முன் சென்று கொண்டிருக்கிறது. அந்த ஆறு தான் செல்லவிருக்கும் புதிய இடங்களில் என்னமாதிரியான அபாயங்களைச் சந்திக்க வேண்டியிருக்குமோ என்று நினைத்து கலங்கவில்லை. புதுமைகளைச் சந்திக்கும் ஆசையில் இடையில் எதிர்படும் எதிர்ப்புகளைக் கண்டு அது சிறிதும் பயப்படவில்லை. மலை உச்சிகளிலிருந்து அது நீர் வீழ்ச்சிகளாக கீழே சீறிப்பாய்ந்து முன் சென்றது. அது செல்லும் வழியில் வாழ்ந்து வரும் மனிதர்களின் தாகத்தைத் தீர்த்து உதவியது.அந்த ஆற்றில் இரு பக்கங்களிலும் இருந்த நிலங்களில் வளர்ந்து வரும் பலவிதமான பயிர்களுக்கு தேவையான நீரை அது கொடுத்தது. அதன் மீது மக்கள் படகுகளில் மிதந்து மகிழ்ந்து வந்தார்கள். அந்த ஆற்று நீரில் மீன்கள் துள்ளி விளையாடின. சிறிதுகூட சோம்பேறித்தனம் இல்லாமல் அது தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டிருந்தது. அதற்கு கலக்கமோ அல்லது குழப்பமோ சிறிதுகூட இல்லை. அதற்கு அனைத்து நேரமும் கொண்டாடட்டம் தான். ஒரு குதூகலம் தான்.அந்த விசாலமான ஆற்றின் ஒரு ஓரத்தில் ஒரு பள்ளம் இருந்தது. வெள்ளப் பெருக்கின் போது அந்த பள்ளம் முழுவதிலும் ஆற்றுநீர் நிறைந்து விட்டிருக்கிறது. அந்த பள்ளத்தில் நீர் எந்தவிதமான சலனமும் இல்லாமல் தேங்கி நின்றது. சில நாட்களுக்குப் பிறகு அந்த நீரில் பாசி படர்ந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. அது ஒரு சிறிய குட்டையைப் போன்று காட்சி தர ஆரம்பித்தது. அந்த நீரில் மீன்கள் துள்ளி விளையாடவில்லை. அந்த நீரில் எந்தவிதமான உயிர்த்துடிப்பும் காணப்படவில்லை. அந்தக் குட்டையைப் பார்க்கும் போது அருவருப்புத் தான் ஏற்பட்டது.மனிதர்களாகிய நாம் உயிர்த்துடிப்புடன் முன் சென்று கொண்டிருக்கும் மனித வாழ்க்கை என்ற ஆற்றுடன் நம்மை இணைத்துக் கொண்டு முன் செல்லாமல் அதிலிருந்து தூரமாக விலகிச் சென்று நமக்கு நாமே தனியாக ஒரு குட்டையை உருவாக்கிக் கொண்டு அதில் நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் - ஆசைகள், பயங்கள், பொறாமைகள், வெறுப்புகள், ஏக்கங்கள், குழப்பங்கள், கலாச்சாரங்கள், கடவுள்கள், மதங்கள், பூஜை, வழிபாடுகள், மரபுகள், கோட்பாடுகள், சடங்குகள், மூடநம்பிக்கைகள், நாடுகள், கொடிகள், அரசியல், கொள்கைகள், இனங்கள், ஜாதிகள் போன்றவற்றை இறுகப்பற்றிக் கொண்டு - சாரமற்ற அருவருக்கத்தக்க அவலமான வேதனை நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.நாம் அனைவரும் பாதுகாப்பை விரும்புகிறோம். நிலைத்து நிற்கும் வாழ்க்கையில் தான் நமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். நாம் செய்துவரும் அதே வேலையில் தான் பாதுகாப்பு இருப்பதாக நினைக்கின்றோம். நமக்குத் தெரிந்தவர்களுடன் வாழ்ந்து வரும் போது தான் நமக்கு பாதுகாப்பு கிட்டும் என்று கருதுகிறோம். புதிய இடங்களை நாடிசெல்வதனால் மோசமான வாழ்க்கை அமைந்துவிடுமோ என்று அஞ்சுகின்றோம். புதிய இடங்களில் வாழ்ந்து வருபவர்கள் நமக்கு உதவி செய்யமாட்டார்கள் என்று பயப்படுகிறோம்.ஆகையால் நாம் மாற்றம் இல்லாத நிலையான (Permanency) வாழ்க்கையை விரும்புகிறோம். வாழ்க்கை என்ற ஆற்று நீரோடு நம்மை இணைத்துக் கொண்டால் நாம் நிறைய மாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் பாசி படர்ந்த துர்நாற்றம் வீசும் அசுத்தம் நிறைந்த குட்டை நீரில் நாம் வாழ்ந்து வந்தால் எந்த ஒரு புதிய மாற்றத்தையும் நாம் சந்திக்க வேண்டியிருக்காது. மாற்றங்கள் இருந்தால் தான் அபாயங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பயந்து மாற்றம் எதுவும் இல்லாத குட்டை நீரைப் போன்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.இப்படிப்பட்ட மனநிலையுடன் வாழ்ந்த வரும் தனிதர்கள் தங்களுடைய நாடு மதம் இனம் ஜாதி கட்சி போன்றவை தங்களுக்கு பாதுகாப்பு தரும் என்று நம்புகிறார்கள். தங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் போது தங்களுடைய நாடு, மதம், இனம், ஜாதி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஓடிவந்து தங்களுக்கு உதவி செயவார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால் நாடு, மதம், கட்சி போன்றவை மனித இனத்தை பல பிரிவுகளாகப் பிரித்து அவற்றுக்கிடையே போட்டி, பொறாமை, சந்தேகம், வெறி, மிருக்கதனம் போன்றவற்றை வளர்த்து வருகின்றன.தத்துவஞானி ஜே.கே. கிருஷ்ணமூர்த்தி

No comments: