கடையநல்லூர், பிப். 28:
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றவர்களை போலீஸôர் விரட்டியடித்தனர்.
இந்த மோதலில் போலீஸ் தரப்பில் 4 பேரும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தரப்பில் 7 பேரும் காயமடைந்தனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, போலீஸôரைக் கண்டித்து கடையநல்லூர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டிய மனித நீதிப் பாசறை அமைப்பைச் சேர்ந்த அல்லிமூப்பன் தெருவைச் சேர்ந்த அகமது மகன் லுக்மான்ஹக்கீம் (21), சிவகாசியைச் சேர்ந்தவரும் தற்போது கடையநல்லூரில் வசித்து வருபவருமான இக்பால் மகன் அப்துல்காதரையும் (23) கடையநல்லூர் போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை இந்த அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கடையநல்லூர் பெரியபள்ளிவாசல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் எனக்கூறி போலீஸôர் தடுத்தனர். இருப்பினும் அந்த அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போலீஸôர் ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போலீஸôர் சிலர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீஸôர் லேசான தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். இந்நிலையில், இப்பிரச்சினையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியதில் காவலர்கள் ஞானசிகாமணி (50), வேல்முருகன் (43), ஜெயக்குமார் (31), சுடலை (32) ஆகிய 4 பேர் காயமடைந்து கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல போலீஸôர் தடியடி நடத்தியதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸôர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து கடையநல்லூரில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், பாலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர். கடையநல்லூர் அரசு மருத்துவமனையை சுற்றிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment