Monday, March 17, 2008

அதிமுக இளைஞர் பாசறைகளில் சேர ஆளில்லை!

கரூர்: கரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட அதிமுக இளைஞர் பாசறையில் சேர போதிய எண்ணிக்கையில் இளைஞர்கள், இளைஞிகள் முன் வரவில்லை.

இதையடுத்து அக் கட்சியின் இளைஞரணி, மகளிரணியி்ல் உள்ளவர்களையே மீண்டும் பாசறைகளில் உறுப்பினர்களாக சேர்த்து கட்சியில் புதிதாக ஆட்கள் சேர்ந்தது போல நாடகம் நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விஜய்காந்த் கட்சியில் ஏராளமான இளைஞர்கள் சேர்ந்து வருவதையடுத்து உதறல் எடுத்த திமுக எப்போதுமில்லா அதிசயமாக இளைஞரணி மாநாட்டை நடத்தியது.

அதிமுகவும் போட்டி போட்டிக் கொண்டு தமிழகம் முழுவதும் இளைஞர் பாசறைகளையும் இளம் பெண்கள் பாசறைகளையும் தொடங்குவதாக அறிவித்தது.

இதுவரை எந்தக் கட்சிகளிலும் சேராத பதினெட்டு வயதிலிருந்து இருபந்தைந்து வயதுக்குட்பட்டவர்களை இதில் சேர்த்து அதிமுகவை பலப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த 7ம் தேதி முதல் பாசறைகள் தொடங்கப்பட்டன.

ஆனால், கரூர் மாவட்டத்தில் இந்த அதிமுக பாசறைகளில் சேர போதிய இளைஞர்கள் இளம் பெண்கள் முன் வரவில்லை.இதையடுத்து ஏற்கனவே அதிமுக இளைஞரணி, மற்றும் மகளிர் அணியில் உள்ளவர்களை மீண்டும் பாசறைகளில் சேர்த்து புதிதாக கட்சியில் சேர்ந்தவர்கள் போல கணக்கு காட்டியுள்ளனர் அம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்.

இது தொடர்பான விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செம்மலையிடம் சில சீரியசான அதிமுக தொண்டர்கள் இது பற்றி புகார் கூறினர்.

ஆனால், நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டு இப்போது தான் கட்சியில் சாப விமோச்சனம் பெற்றுள்ள செம்மலை, நமக்கு ஏன் வம்பு என்று சைலண்ட்டாகிவிட்டார்.

இதையடுத்து சில நிர்வாகிகள் தலைமைக்கு புகார் கணைகளை பறக்க விட்டுள்ளனராம்.

கரூரில் மட்டுமல்ல தமிழகத்தின் பல பகுதிகளிலுமே இந்த 'ஜோக்' நடந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

No comments: